வலையுலக நண்பர்கள்

Monday, August 11, 2014

நவகிரக தல வழிபாட்டுப்பின்னணி - 2


சாபமொழி கேட்ட நவகிரக நாயகர்களும் நடுங்கினர். உடல் பதைத்து உள்ளம் வருந்தி பிரம்மதேவர் அடி பணிந்தார். ‘’படைப்பின்  நாயகனே!  எங்களை மன்னித்தருளுங்கள். காலவ முனிவரின் தவத்தின் வெம்மை நவமண்டலங்களை அடைந்து எம்மைச் சுட்டெரித்தது. அதனால் அவர் முன் தோன்றி  அவர்  கேட்ட வரம் தந்து  விட்டோம்.  அறியாமற் செய்த  பிழை பொறுத்து சாபத்திற்கு விமோசனம் கூற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.      மனம் இளகினார் பிரம்மதேவன். நவகிரகநாயகர்களே  நீங்கள் பூலோகத்தில் புண்ணிய பூமியான பரத கண்டம் சேருங்கள்.  தென் பாரதமான தமிழ்நாட்டுக் காவிரியாற்றின் வடகரையை அணுகுங்கள். அங்கே அர்க்கவனம் என்னும் வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே கார்த்திகை மாதத்து முதல் ஞாயிறு தொடங்கி  பன்னிரண்டு ஞாயிறு முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரிய வேண்டும்.  ஒவ்வொரு திங்கள் அன்றும் உதயத்திற்கு முன்னர் காவிரி நீராடிப் பிராணநாதரையும், மங்களநாயகியையும் வழிபட வேண்டும்.  உதயாதி ஏழு நாழிகைக்குள் அர்க்க இலை , அதாவது வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி அளவு தயிர் அன்னம் வைத்து அதைப் புசிக்க வேண்டும் மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்கவேண்டும்  இந்நோன்பைச் சிறிதளவும் தவறு நேராமல் செய்து வந்தால் விமோசனம் கிட்டும் என்றார். பிரம்மதேவர் ஆனைப்படி நவநாயகர்கள் பூலோகம் மேவினர். காவிரி நதியின் வடகரை வழியாக அர்க்கவனம் தேடி வந்தனர். தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதைக் கண்டு விரைந்து சென்று அவரை அணுகி வணங்கினர்.
    
தம் வரலாற்றைக் கூறி ‘’அர்க்கவனத்தைத் தேடுகிறோம். அது உள்ள டத்தை அறிவிக்க வேண்டுகிறோம்’’  எனப்பணிந்தனர். அகத்தியர் அவர்களை நோக்கி ‘’நாமும் அர்க்கவனத்திந்குப் பிராணநாதரை வழிபடத்தான் செல்கிறோம். உங்களையும் அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்’’ என்றார். அனைவரும் அர்க்கவனம் அடைந்ததும் காவிரியில் நீராடிப் பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட்டனர். அகத்டிதயர் பிராணநாதரை வழிபடும் போது, தமது குறுங்கையைக் காவிரியாறு வரை நெடுங்கையாக நீட்டி நீரை முகர்ந்து மீண்டும் குறுங்கையாகச் சுருக்கி அந்த நீரால் அபிஷேகம் செய்தார்.
இந்த அற்புதத்தை நவநாயகர்கள் கண்டு அகத்தியரின் தவ்வலிமையை எண்ணி விம்மிதமுற்றனர். அந்த நேரத்தில் காலவ முனிவரைப் பற்ற வேண்டிய தொழுநோய், பிரம்மனது சாபத்தால் நவகிரக நாயகர்களைப் பற்றியது.  நவகிரக நாயகர்களது அங்கமெல்லாம் குறைந்து அழுகிப்போயின. அகத்தியரிடம் தாங்ஙகள் தவம் செய்யவேண்டிய முறையை தெரிவித்தருளுமாறு வேண்டினர். அகத்தியரும் அவர்கள் நிலைகண்டு மனமிரங்கி. நவகிரக நாயகர்களே நீங்கள் தவம் செய்ய இந்த அர்க்கவனத்தின் வடகிழக்குப்பகுதியை தேர்ந்தெடுங்கள். அங்கு வினைதீர்க்கும் விநாயகப்பெறுமானை ப்ரதிஷ்டை செய்து, தவம் விக்கினமில்லாமல் முடியப்பிராத்தனை செய்து, பிரம்மன் கூறியபடி தவம் செய்யுங்கள். தவத்தில் மனதை ஒருமுகப்படுத்திப் பிராணநாதரை தியானியுங்கள், அர்க்கவனத்திலுள்ள ஒன்பது தீர்த்தங்களையும் ஒவ்வொருவரும் ஒரு தீர்த்தமாக தேர்ந்தெடுத்து நாள்தோறும் அவற்றில் நீராடுவீர்களாக என்று விவரமாய் விவரித்தார். நவகிரக நாயகர்களும் அகத்தியரை நோக்கி, முனிவரே நாங்கள் எந்தவித சுணக்கமும் இன்றி தீர்த்தத்தில் நீராடி தவமியற்ற தயாராக உள்ளோம், ஆனால் எங்களை எருக்க இலையில் தயிரன்னத்தை புசிக்கச்சென்னதற்கு என்ன காரணம்  என்று வினவினர்
அகத்தியர் புன்முறுவல் செய்து, அது தேவரகசியம் என்று கூறினார்,
                                                                        தொடரும்   ........
முதல் பகுதி 
நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1

0 கருத்துரைகள்: