வலையுலக நண்பர்கள்

Tuesday, December 09, 2014

தேடிதரிசித்த திருதலங்கள் சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,

சுவாமி மலை, தஞ்சாவூர்
----------------------------------------------------------------------------------------------
'கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த தொடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட கதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து பணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த பெரியோனே
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து வரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க ணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த பெருமாளே.'
- அருணகிரி நாதர்

தமிழ்க்கடவுளான முருகப்பெம்மான் ஆறுபடைவீடுகளுள் ஒன்றான சுவாமி மலை தஞ்சையிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இரு நகரங்களிலிருந்தும் பஸ் வசதி கோயில் வரை உண்டு. திருவேரகம் என்ற புராணப் பெயர் கொண்ட இத்திருத்தலத்திற்கு அருகில் திரு புள்ளம் பூதங்குடி மற்றும் திரு ஆதனூர் என்னும் வைணவ திவ்யதேசங்கள் இரண்டு அமைந்துள்ளன. சுவாமி மலைக்கு வெகு அருகிலேயே திருவலஞ்சுழி என்னும் தென்க்ரைத் தேவாரத் திருத்தலமும் அமைந்துள்ளது. இவற்றை அடுத்தடுத்துக் காணலாம்.

தலபுராணம்

முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஞான வடிவாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்டிர் அணைத்து வளர்த்த கந்தன் ஒரு முறை படைப்புக் கடவுளான பிரமனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டு, அவர் பதில் கூறாதிருக்கவே அவரைச் சிறையிலிட, இதனால் தேவர்களும், இந்திரனும் சிவபெருமானிடம் முறையிட்டனர். எம்பெருமான் தன் பிள்ளையிடம் அம்மந்திரத்திரத்திற்கான பொருளை உரைக்கும்படி தன் மடியில் வைத்துக் கொண்டு வினவ, அவரது காதில் ஓம் எனும் மந்திரத்தின் பொருளை உணர்த்தினார் கார்த்திகேயன். தந்தைக்கே மந்திரம் சொன்னவர் என்பதால், பிள்ளையே சுவாமி ஆயினன். சுவாமிக்கே நாதன் என்றானதால் சுவாமி நாதனும் ஆயினன். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனும் ஆனான்.

ஞானத்தின் முன்னால் தகப்பன் மகன் என்ற உறவு கூடப் பெரிதல்ல என்பதை உணர்த்துவதே இத்தல புராணம்.

சுவாமிநாதர் என்றும் சுப்பையா என்றும் அழைக்கப் பெறும் வேலவன் இங்கு வள்ளி தெய்வயானை சமேதனாகக் காட்சி தருகிறான்.

மூலஸ்தானத்தில் முருகப் பெம்மானின் பீடம் ஆவுடையாகவும், அவர் பாண லிங்கமாகவும் அமைந்திருப்பதாக ஐதீகம். இதன் காரணமாக, இங்கு கதிர்வேலன் சிவ ரூபமாக விளங்குகிறான் என்று சொல்வர்.

இங்கு கோயிலை அடையக் கடக்க வேண்டிய அறுபது படிகள், அறுபது தமிழ் வருடங்களைக் குறிக்கும் என்று சொல்வர்.

தலச்சிறப்பு

குருமலை, குருகிரி என்னும் பெயர்களும் கொண்ட இத்தலம் கல்வி, கேள்வியிற் சிறந்து விளங்கவும், பரிபூரண ஞானமடையவும் வழிபடவேண்டிய கோயிலாகும்.
தந்தை மகன் உறவில் பிணக்குகள் தீர இது நிவர்த்தித் தலமாகும்.
ஹரிகேதன் என்னும் அரக்கனை வென்ற தலமாதலால், இது சத்ரு சம்ஹாரத் தலமுமாகும். ஜாதகத்தில் ஆறாமிடமான மறைமுக சத்ருக்கள் ஸ்தானத்தால் அவதியுறுவோர் இங்கு மயில்வாகனனைப் பணிந்து மனதில் அமைதி பெறலாம்.

தலப்பண்

எப்போதும் புத்திமதி பிள்ளைக் கியம்பிடுவான்
அப்பனென் றூரார் அறிந்ததை மாற்றியிவன்
தப்பாது ஓங்கா ரமுரைத்தே தானானான்
அப்பனாய் சாமிமலை ஆங்கு.

ஓம் சரவணபவ!

2 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said...

சுவாமிமலை தலத்தைப்பற்றி சிறப்பான தகவல்கள் பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு.... பலமுறை சென்றுள்ளேன்...