வலையுலக நண்பர்கள்

Thursday, February 23, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்!...

 ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. எமபயம் நீக்கும் தலங்களுள் திருக்கடயூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது ஆயுள் விருத்தி தலமாகப் போற்றப்படுகிறது.
சுவாமி : அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் : அபிராமி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை
தலவிருட்சம் : வில்வம்
தல வரலாறு :
🌿 முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாததால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) 'அமிர்தகடேஸ்வரர்" என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இதனால் விநாயகர் இத்திருக்கோவிலில் 'கள்ளவிநாயகர்" என்று பெயர் பெற்றார்.
🌿 மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்தியை கண்டு இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தம்பதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர்.
🌿 சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர், ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் இறுதி நாளும் வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டான். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்திற்கும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார்.
பிரார்த்தனை :
🌿 இத்தலத்து அமிர்தகடேஸ்வரர் வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும், உடல் பலம் பெறும், நோய் நொடி விலகும், எமபயம் அண்டாது.
🌿 வேலை கிடைக்க, தொழில் விருத்தி அடைய, உத்தியோக உயர்வு பெற இங்கு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
🌿 இங்குள்ள அபிராமி அம்மனை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.
சிறப்பு :
🌿 ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜைகள் இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.
🌿 கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ நாட்கள்.
🌿 தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இத்தல விசேஷம்.
🌿 கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

No comments: