வலையுலக நண்பர்கள்

Wednesday, March 08, 2017

தினம் ஒரு திருத்தலம் - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்...!

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
  கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும்.
வரலாறு :
👉 இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிருந்து பத்தாவது நு}ற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.
👉 தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோவில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்டவர்மரின் முயற்சியால் 1729-இல் இது புதுப்பிக்கப்பட்டது.
கோவில் அமைப்பு :
👉 பத்மநாபசாமி கோவிலின் கோபுரம் 100 அடி உயரத்துடன், ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது.
👉 இந்த கோவில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9 கோட்டைகள் உள்ளன.
👉 கோவிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன.
👉 கோவிலுக்குள் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன.
👉 இந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஐயப்பர், ஸ்ரீகணேஷர் மற்றும் ஸ்ரீஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும் கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.
கோவில் கருவறை :
👉 கோவிலின் கற்பக்கிரகத்தில், அய்யன் மகாவிஷ்ணு அனந்தன் அல்லது ஆதிசேஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. மகாவிஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீதேவி மற்றும் மூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.
👉 மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள். கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை ஒற்றைக்கல் மண்டபம் என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் ஒற்றைக்கல் மண்டபத்தின் மீது ஏறவேண்டும்.
👉 இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகாராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது.
ஓம் நமோநாராயணாய

Monday, March 06, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோவில்!...

🌠 ஸ்ரீவேதநாராயண பெருமாள், ஸ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து, ஞானம் வழங்கி அருளும் அற்புதமான இத்தலம் தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுவாமி : வேதநாராயணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
அம்பாள் : வேநாயகி தாயார்
மூர்த்தி : அனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆண்டாள்.
தீர்த்தம் : காவிரி
தலவிருட்சம் : வில்வம்
தல வரலாறு :
🌠 மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோவில் எழுப்பு 'உனக்கு ஜெயம் உண்டாகும்" என அருளினார். மன்னர், விடிந்ததும் பெருமாளின் திருவிக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார்.
🌠 வேதநாராயணபெருமாள் திருக்கோவிலுக்காக அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்ற பிறகு மைசூரை வென்றார்.
தல வரலாறு :
🌠 வேதநாராயணபெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் ஸ்ரீவேதநாராயணரைத் தரிசிக்கலாம்.
🌠 சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது. அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.
🌠 நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் ஸ்ரீதிருமால் என்பது ஐதீகம்.
🌠 பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார்.
🌠 பிரமன், பிரகலாதன், சுக்கிரீவன், கருடன், அனுமன், ஆரையர், சோழர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இத்தலம் ஆதிரங்கம் அதாவது முதல் ரங்கம் என்று போற்றப்படுகிறது.
🌠 புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான ஸ்ரீவேதநாராயண பெருமாள் தலத்தில் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறும். எம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை :
🌠 27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
🌠 ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட, கல்வி மேம்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கை.
ஓம் நமோ நாராயணாய

Saturday, March 04, 2017

தினம் ஒரு திருத்தலம் - வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில், கோயம்புத்தூர்!...

வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோவில்
🌿 தென்கயிலை என பக்த


ர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும். தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் கிடைக்கும்.
மூலவர் : வெள்ளிங்கிரி ஆண்டவர்
அம்மன் : மனோன்மணி
தீர்த்தம் : பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம்
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்


தல சிறப்பு:
🌿 கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோவில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது.
🌿 இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம்மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமியன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும்.
🌿 இம்மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த்தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.
🌿 சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.
தல பெருமை :
🌿 இறைவன் பஞ்சலிங்கமாக விளங்கும் இத்தலம் இரசதகிரி, தக்கிண கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர் முனிவர்கள் சென்றதனால் இறைவன் வேள்வியை கோபங்கொண்டு அழித்தார். தேவர் முனிவர்களை சபித்தார். பிறகு தன் முகங்களை ஐந்து கிரிகளாகக் கொண்டு கொங்குநாட்டில் மறைந்தார். சாபம் நீங்கப் பெற்ற தேவர் முனிவர்கள் சிவபெருமானைக் காண சென்றனர். நவகிரக பீடிதங்கள் நீங்கி பழநி திருவாவினன்குடி கன்னிகாவனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றி சனிபகவான் அருள்பெற்றும், ஐப்பசி ஐந்து வாரம் பவானியில் துலாமுழுக்கு செய்தும், கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் மேற்கண்ட பஞ்சகிரிகளுக்கும் சென்று பஞ்சமுகங்களைத் தொழுதும் பேறுபெற்றனர். முடிவில் ஐந்தாம் வாரத்தில் வெள்ளியங்கிரியில் இறைவனைக் கண்டும் வணங்கி பேறுபெற்றனர். அர்ஜூனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே. சிவபெருமான், உமயவளின் வேண்டுதலின்படி திருநடனம் ஆடியதும் இத்தலத்தில் தான். வெள்ளிமலையானை நினைத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும் நல்குவார்.
திருவிழா:
🌿 இத்திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.

சம்போ மஹாதேவா